

தமிழகத்தில் முதன்முறையாக தனுஷ்கோடியில் கடலுக்கு மேல் காற்றாலைகளை அமைக்க மத்திய எரிசக்தி துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது.
இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில், இந்தியாவில் உள்ள 7600 கிலோ மீட்டர் நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடற்பகுதியில் மணிக்கு 29 கிலோமீட்டர் வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.
இதற்காக ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வு பணிகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த 5 ஆண்டுகளில் கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்குகளுடன் முதலிடம் வகிப்பதுடன், இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை நிறைவு செய்கிறது.
மேற்கத்திய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதுபோல, கடலுக்கு மேல் காற்றாலைகளை அமைக்கும் பணிகள் இந்தியாவில் முதன்முறையாக குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியில் மத்திய எரிசக்தி துறை சார்பாக கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.
குஜராத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் தனுஷ்கோடி கடற்கரையில் கடலுக்குள் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள் நான்கு முதல் ஜந்து மிதக்கும் காற்றாலைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் எடுக்கப்படும் மின்சார்ம் ராமேசுவரம் நகராட்சி பகுதிக்கும் மற்றவை பொருளாதார நோக்கோடு பயன்படுத்தப்படலாம்.
இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் தமிழகத்தில் முதன்முறையாக ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கடலுக்கு மேல் காற்றாலைகளை அமைக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.