

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற நூலை தொடர்ந்து இடம்பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டியக்கத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் துணைவேந்தர் பிச்சுமணியிடம் மனு அளித்தனர்.
திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டியக்கத்திலுள்ள திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப், திருநெல்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மதிமுக பகுதி செயலாளர் கான் முகம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் செல்வானந்த், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.
மனு விவரம்:
சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் படித்து வந்த, எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the Comrades என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக, சட்டநெறிமுறைகளுக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
மாணவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பொறுப்புணர்வையும், இலக்கியத்திறனையும் கூர்தீட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூல், இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிலும் தடை செய்யப்படவில்லை.
எனவே நீக்கப்பட்ட இந்த புத்தகத்தை தொடர்ந்து பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் மனு அளிக்க பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் வந்ததை அடுத்து மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.