Published : 17 Nov 2020 06:00 PM
Last Updated : 17 Nov 2020 06:00 PM

நீர் மேலாண்மையில் நாட்டிலேயே 2-வது இடம் பெற்றும் மழை தண்ணீரில் தத்தளிக்கும் மதுரை: பேருந்து நிலையம், சாலைகளில் தெப்பம்போல் தண்ணீர் தேக்கம்

மதுரை 

நீர் மேலாண்மையில் நாட்டிலேயே இரண்டாவது இடம் பெற்ற மதுரை மாநகராட்சி, நகர்ப்பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற முடியாமல் திணறுவதால் பஸ் நிலையம் முதல் குடியிருப்புகள், வாகனங்கள் செல்லும் சாலைகள் வரை அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக மதுரையில் ஒரளவு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது.

ஆனால், அந்த மழைநீரை சேமிக்க மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் போதிய நடவடிக்கை எடுக்காததால் அந்த தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது.

வைகை ஆற்றிலும் தண்ணீர் வராததால் மதுரையில் நிலத்தடி நீர் பாதாளத்திற்குச் சென்றது. வைகை அணையில் இருந்து மட்டும் குடிநீர் வராவிட்டால் மதுரையில் மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு மாநகராட்சி ஜல்சக்தி திட்டத்தில் 14 குளங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து தூர்வாரியது. அந்தக் குளங்களில் தற்போது பெய்யும் மழை தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது.

ஆனால், நகர்பகுதியிலேயே உள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், வண்டியூர் கண்மாய், டவுன் ஹால் ரோடு கூடழகர் கோயில் தெப்பக்குளம், அழகர் கோயில் சாலையில் உள்ள கொடிக்குளம் கண்மாய், டிவிஎஸ் நகர் முத்துப்பட்டி கண்மாய் உள்ளிட்ட குளங்கள், கண்மாய்களில் மழைநீர் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால், நகர்ப்பகுதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்யும் மழைநீர் செல்வதற்கு இடமில்லாமல் குடியிருப்புகள், சாலைகளில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக பல மணி நேரம் மதுரையில் காலை, மாலை நேரங்களில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே மழைநீர் வடிகால் கால்வாய்கள் முழுவதும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆக்கிரமிப்பு பின்னணியில் மிகப்பெரிய நிறுவனங்கள், அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் இருப்பதால் மாநகராட்சியால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.

அதனால், அந்த கால்வாய்களுக்கு வர வேண்டிய மழைநீர் தொடர்ந்து புறநகர்ப் பகுதிகளுக்கு தடையின்றி செல்ல வழியில்லாமல் நகர்ப்பகுதியிலே ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

வைகை ஆற்றின் இரு புறமும் போதிய திட்டமிடுதல் இல்லாமலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி தடுப்புச் சுவர் கட்டியுள்ளது. அதனால், நகர்ப்பகுதியில் வைகை ஆற்றின் இரு புறமும் பெய்யும் மழை தண்ணீர் இயல்பாக ஆற்றிற்குள் செல்ல முடியாமல் சாலைகளில், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது.

மதுரை கே.கே. நகர் அருகே நிர்மலா பள்ளி அருகே இதுவரை மழைநீர் தண்ணீர் தேங்கியது இல்லை. அப்பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் வைகை ஆற்றிற்குள் சென்றுவிடும்.

ஆனால், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் தெப்பம்போல் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர்.

அதுபோல் பெரியார் பஸ்நிலையத்தில் நேற்று பெய்த மழையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். நேற்றும் 3-வது நாளாக மழை தொடர்ந்ததால் மக்கள் நகர்ப்பகுதியில் தேங்கி தண்ணீரால் தத்தளித்தனர்.

அதனால், பெரியார் பஸ்நிலையம், பழங்காநத்தம், ஒத்தக்கடை, கே.கே.நகர், செல்லூர், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளை மழை தண்ணீர் சூழ்ந்தது.

கடந்த காலத்தில் வண்டியூர் தெப்பக்குளம் இயல்பாகவே மழைநீர் மூலமே நிரம்பியுள்ளது. ஆனால், தற்போது வைகை ஆற்றில் இருந்து மாநகராட்சி தண்ணீர் கொண்டு வருகிறது. தற்போது பெய்யும் மழையால் மதுரை மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கண்மாய்க்கு மழை தண்ணீர் வரவில்லை. அதுபோல், வண்டியூர் கண்மாய் மழைநீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் அருகில் உள்ள பெரும் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அப்படியே தண்ணீர் வர ஆரம்பித்தாலும் சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள், நிறுவனங்களால் இரவோடு இரவாக கண்மாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.

அதுபோல், டவுன் ஹால் ரோடு கண்மாய்க்கும் பெரியார் பஸ்நிலையம், டவுன் ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது.

ஆனால், தற்போது மழை தண்ணீர் இந்த குளத்திற்கு வருவதில்லை. அதுபோல் டிவிஎஸ் நகர முத்துப்பட்டி கண்மாய், கொடிக்குளம் கண்மாய்களுக்கும் மழைநீர் தண்ணீர் வராமல் வறண்டுபோய் உள்ளது.

இதுபோல் மதுரை மாநகராட்சியில் தண்ணீர் தேங்கும் 40-க்கும் மேற்பட்ட மாநகராட்சி கண்டறிந்து இருந்தும், அப்பகுதில் தண்ணீர் தேங்காமல் இருக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நிரந்தரமாக மழைநீர் தேங்கிக் கொண்டிருக்கிறது.

மதுரைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘ஜல்சக்தி’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் அது மதுரையில் மழைநீரை சேமிக்கவும், வழிந்தோடவும் செய்வதற்கான திட்டங்களாக இல்லை.

சமீபத்தில் கூட மழைநீரை சேமிப்பதிலும், நீர் மேலாண்மை செய்வதற்காகவும் நாட்டிலேயே இரண்டாவது மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி விருது பெற்றது. அந்த விருதுப்பெற்ற சில வாரங்களிலேயே மழைத் தண்ணீரில் மதுரை தத்தளிப்பது வேதனையளிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x