Last Updated : 17 Nov, 2020 04:36 PM

 

Published : 17 Nov 2020 04:36 PM
Last Updated : 17 Nov 2020 04:36 PM

கோவை மாவட்ட காவல்துறையில் மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம் புதியதாக உருவாக்கம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

கோவை 

கோவை மாவட்ட காவல்துறையில், மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 6 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகம

பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய ஐந்து உட்கோட்டங்களுடன், 33-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் இயங்கி வருகிறது.

அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட காவல்துறைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு வந்து புகார் அளித்துச் செல்கின்றனர்.

மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் தொலைதூரப் பகுதிகளை உள்ளடக்கிய உட்கோட்டமாக பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் உள்ளது. இதில், துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, பில்லூர் அணை, சிறுமுகை, துடியலூர் மகளிர் காவல் நிலையம், துடியலூர் போக்குவரத்து காவல் நிலையம், மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவை இயங்கி வந்தன. இதற்கு அருகேயுள்ள கருமத்தம்பட்டி காவல் உட்கோட்டத்தில் கருமத்தம்பட்டி, அன்னூர், கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வந்தன.

தொலை தூரம்

மேற்கண்ட இந்த இரண்டு உட்கோட்டங்களிலும் தினமும் அதிகளவில் வழக்குகள் பதிவாகின்றன. மேலும், மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் ஒன்றாகவும், அதிக மக்கள்தொகை உள்ள பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. தவிர, நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல முக்கிய வழித்தடமாகவும் இப்பகுதி உள்ளது.

இங்கு ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 35 நிமிடங்கள் பயணித்த பின்னரே டிஎஸ்பி மேட்டுப்பாளையத்துக்கு வரவேண்டியுள்ளது. இதனால் முக்கிய வழக்குகளில் சில சமயம் விசாரணைகளும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

தவிர, கருமத்தம்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட, அன்னூர் காவல் நிலைய எல்லையும் அதிகளவில் உள்ளது. இங்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்தால், 30 நிமிடங்கள் பயணித்த பின்னரே கருமத்தம்பட்டியில் இருந்து டிஎஸ்பி வரவேண்டியுள்ளது.

இதுபோன்ற இடையூறுகளை போக்க மேட்டுப்பாளையத்தை மையப்படுத்தி புதிய உட்கோட்டம் உருவாக்க, சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, மாவட்ட காவல்துறை நிர்வாகத்தின் சார்பிலும், டிஜிபி மூலம் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதனடிப்படையில், மேட்டுப்பாளையத்தை மையப்படுத்தி புதிய உட்கோட்டம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் முன்னரே அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம் உருவாக்க அரசு சார்பில் அரசாணையும் சில தினங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், '48.16 லட்சம் மதிப்பில் மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டம்' அமைக்கப்படும் எனவும், அதில் இடம் பெறும் காவல் நிலையங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

காவல் நிலையங்கள் மாற்றம்

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறும்போது, "மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பில்லூர் அணை, அன்னூர், மேட்டுப்பாளையம் போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகிய 6 காவல் நிலையங்கள் மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டத்தில் இடம் பெறும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு.

துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மகளிர் காவல் நிலையம், துடியலூர் போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகியவை பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் இடம் பெறும்.

கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், சூலூர், செட்டிப்பாளையம், சுல்தான்பேட்டை ஆகியவை கருமத்தம்பட்டி காவல் உட்கோட்டத்தில் இடம் பெறும். மேட்டுப்பாளையம் உட்கோட்டத்துக்கு டிஎஸ்பி விரைவில் நியமிக்கப்பட உள்ளார். மேட்டுப்பாளையத்தில், டிஎஸ்பி அலுவலகம் அமையும். டிசம்பர் முதல் வாரம் முதல் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x