Published : 17 Nov 2020 04:19 PM
Last Updated : 17 Nov 2020 04:19 PM

'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு; தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்: கமல், தினகரன், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி 'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 17) அதிகாலை, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் காலமானார்.

அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த 'க்ரியா' ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

க்ரியா பதிப்பகத்தின் நிறுவனரும், சிறந்த தமிழ்த் தொண்டருமான ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பதிப்புப் பணியை தொழிலாக செய்யாமல் தவமாக செய்தவர்களில் 'க்ரியா' ராமகிருஷ்ணன் மிகவும் முக்கியமானவர். அவரது பதிப்பகத்தின் மூலம் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நூல்களே வெளியிடப்பட்டாலும் கூட, அவை அனைத்தும் போற்றத்தக்கவையாக அமைந்தன. பிற மொழிகளில் வெளியான தரமான படைப்புகளை தமிழுக்குக் கொண்டு வந்த பெரும் பெருமை அவருக்கு உண்டு.

கடுமையான உடல்நல பாதிப்பையும் பொருட்படுத்தாமல் க்ரியா தமிழ் அகராதியின் விரிவாக்கித் திருத்தப்பட்ட மூன்றாவது பதிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் தான் வெளியிட்டார். தமிழுக்கு அவரது தொண்டு தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மண்ணை விட்டு பிரிந்துவிட்டார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பதிப்புத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பதிப்புலகில் சாதனை படைத்த கிரியா ராமகிருஷ்ணன், இன்று அதிகாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். கோவிட் - 19 நோய்த் தொற்றுக்கு ஆளான கிரியா ராமகிருஷ்ணன் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் தனது 'தற்கால தமிழ் அகராதி'யின் மூன்றாம் பதிப்பை வெளியிடும் வேட்கையே சுவாசக் காற்றாக இருந்தது என்பதை 'தமிழ் உலகம்' என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடும்.

பதிப்புத்துறையில் மட்டும் அல்ல மொழி, இலக்கியம், வரலாறு என படைப்புலகிலும் ராமகிருஷ்ணன் முத்திரை பதித்தவர். அவரது இழப்பு எளிதில் ஈடுசெய்ய இயலாதது. 'கிரியா' ராமகிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் பதிப்பு மற்றும் படைப்புலக நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த 'க்ரியா' ராமகிருஷ்ணன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. ராமகிருஷ்ணனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

தற்காலத் தமிழ் அகராதியைத் தொகுத்த அதன் தலைமையாளரான, 'க்ரியா' பதிப்பக உரிமையாளர் - பதிப்பகச் சாதனையாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி நமக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தைத் தந்தது!

மரணப் படுக்கையில் இருந்துகொண்டு 'தற்காலத் தமிழ் அகராதி'யின் மூன்றாம் பதிப்பைக் கொண்டு வர தமிழ்ப் பணி செய்த தகைமையாளர். அவர் நலமடைந்து வழக்கமான இலக்கியப் பணியைத் தொடருவார் என்ற நம் நம்பிக்கையை இயற்கையின் கோணல் புத்தி பறித்து விட்டது! படுக்கையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பணி செய்ததைப் பாராட்டி, மூன்று நாள்களுக்கு முன்பு எழுதி அது இன்று 'விடுதலை'யில் வெளிவரும் நிலையில் இச்செய்தி நமக்கு!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், பதிப்பகப் பணித் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.

'தமிழுக்குத் தொண்டு செய்தோன்
சாவதில்லை' என்றார் பாரதிதாசன்.

இன்றும், என்றும் தமிழ்கூறும் நல்லுலகின் சிந்தனையில் அகராதிக் கருவூலமாக வாழ்வார் அவர் என்பது உறுதி!

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x