விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ. 17) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின்போது, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளாரே?

அது தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து எங்களுக்கு எதுவும் தகவல் வரவில்லை. அமித் ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எல்,முருகன் கூறியுள்ளார். இருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டும், அவரைத் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்யாததன் காரணம் என்ன என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாரே?

திமுகவைப் பொறுத்தவரையில் எதையும் யோசிக்காமல், விசாரணை இல்லாமல், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. இயற்கை நியதி என்ற ஒன்று இருக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எந்தப் பதவியில் உள்ளவராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். அதனடிப்படையில்தான், விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்.

நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தருகின்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in