

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால், நீட் தேர்வு வந்த பிறகு முதன்முறையாக மதுரை மாநகராட்சிப் பள்ளியில் இருந்து மருத்துவப் படிப்புக்குத் பவித்ரா என்ற மாணவி தேர்வாக வாய்ப்பு உருவாகியுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்வான மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பவித்ரா 209-வது இடத்தைப் பெற்றுள்ளார். ஓபிசி பிரிவில் 69-வது இடத்தப் பெற்றுள்ளதால் இவருக்கு மருத்துவ படிப்பிற்கு தேர்வாக வாய்ப்புள்ளது.
இந்த மாணவி மருத்துவப் படிப்புக்குத் தேர்வானால் நீட் தேர்வு வந்த பிறகு மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து முதல் முறையாக மருத்துவப்படிப்பிற்கு தேர்வாகுவார்.
மாணவி பவித்ராவின் தந்தை பாலுச்சாமி. இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். பவித்ரா ப்ளஸ்-டூ தேர்வில் 471 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் 214 மதிப்பெண் பெற்றார்.
6-ம் வகுப்பு முதல் பவித்ரா இதே பள்ளியில் படிக்கிறார். நீட் தேர்வுக்காக இவர் வேறு எந்த பிரத்தியேக வகுப்பிற்கும் செல்லவில்லை. இவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களே இவருக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
இந்த மாணவி மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகும் வாய்ப்பு உள்ளதால் அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாணவி பவித்ராவை மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.