

மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்டவர் 'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் என, அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி 'க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 17) அதிகாலை, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான 'க்ரியா' பதிப்பகம் ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிரச்சியையும் வேதனையையும் தருகிறது.
ராமகிருஷ்ணன் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவருக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும்.
பதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர். மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்குத் திமுகவின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈடு செய்ய இயலாத, 'க்ரியா' ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.