

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாதிட்டத்தின்கீழ் வீடு கட்ட, வருமான சான்றிதழ் பெற முடியாமல் பெரிதும் சிரமப்படும் பயனாளிகளுக்கு, விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என அழைக்கப்படும் பிரதமர் வீட்டு வசதி திட்டம் என்பது வீடில்லாத ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை வழங்குவது ஆகும். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், வரும் 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டத்தின்கீழ் கடன் பெறபயனாளிகள் வருமான சான்றிதழ் பெறுவது கடினமாக உள் ளது.
இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும் போது,
‘‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்பட்ட பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள், வருவாய் குறைந்தவர்கள், நடுத்தரமக்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில், குறைந்த வருமான பிரிவினருக்கு ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர் 1-ன் படி, ஆண்டு வருமானம் ரூ 6 லட்சம் முதல் ரூ 12லட்சம் வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர் 2-ன் படி ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருத்தல் வேண்டும்.
வீட்டின் அளவாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 30 சதுர மீட்டர், குறைந்த வருமான பிரிவினருக்கு 60 ச.மீ, நடுத்தர வருமான பிரிவினர் 1-க்கு 160 ச.மீ, பிரிவு 2-க்கு 200 ச.மீ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் வீட்டுக் கடனில் மானிய வட்டி விகிதம் ரூ 6 லட்சத்துக்கு 6.50 சதவீதமாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனாளிகள் தங்களது வருமான சான்று அளிக்க வேண்டும் என வங்கிகள் தெரிவித்து உள்ளன.
ஆனால், பயனாளிகளில் பெரும்பாலோர் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு வருமான சான்று பெறுவது கடினமாக உள்ளது. இதனால், இவர்கள் பயன்பெற முடியவில்லை. எனவே, வங்கிவிதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’’ என்றனர்.