

பிரான்ஸ் ஒரெயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இணைய வழியில், ‘முத்தமிழ் விழா - 2020’ நடத்தப்பட்டது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாக, மூத்த மொழியாக திகழ்வது தமிழ். இத்தகைய பெருமை கொண்ட தமிழ் மொழியை புகழ்ந்து போற்ற வேண்டியதும், அழியாது காக்க வேண்டியதும், மென்மேலும் வளர்க்க வேண்டியதும் நமது மிகப் பெரிய கடமையாகும்.
புதுமை திட்டங்கள் பல வகுத்து, செயல்படுத்தி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடி, அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ரூ.40 கோடியில் புதுப்பிப்பு, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கைகள், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், எம்ஜிஆர் பெயரில் ஒன்றரை லட்சம்நூல்கள் பாதுகாப்பு மையத்துடன் நூலகம், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதி என எண்ணிலடங்கா திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர் இலங்கை வேந்தன், செயலாளர் அலன் கிருஷ்ணராஜ், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் அன்புச்செழியன், பிரான்ஸ் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் இன்னாசி அருளானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.