நெல்லை, தென்காசி, குமரியில் நீடித்த கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் தேங்கிய தண்ணீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். 		              படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் தேங்கிய தண்ணீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
2 min read

திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை இடைவிடாமல் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 23, சேர்வலாறு- 9, மணிமுத்தாறு- 13, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 24, சேரன்மகாதேவி- 15, ராதாபுரம்- 9, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலி- 4.20.

பாபநாசம் அணை நீர்மட்டம் 101.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,071 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 82.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,066 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 25 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது.

தொடர் மழையால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், பல்வேறுஇடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பலத்த மழையால் முக்கிய சாலையில் மரம்சாய்ந்து விழுந்தது. பாபநாசத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 134 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 19 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 8 மி.மீ.,தென்காசியில் 5.40 மி.மீ., குண்டாறு அணையில் 5 மி.மீ., செங்கோட்டை, சிவகிரியில் தலா 2 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் இருந்தே பரவலாக மழை பெய்துகொண்டே இருந்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சில இடங்களில் 3 மணி நேரத்துக்கும் மேல் இடைவிடாது மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 72 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 438 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர்வெளியேற்றப்பட்டது. ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 66 அடியாக இருந்தது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை,திங்கள்நகர், குளச்சல், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம்,கருங்கல் என மாவட்டம் முழுவதும்பரவலாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது. நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாதியளவு மூழ்கியவாறு தத்தளித்த நிலையில் ஊர்ந்து சென்றன. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 29 மிமீ மழை பெய்திருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in