

மலைவாழ் மக்களுக்கு எஸ்டி ஜாதிச்சான்றிதழ் கேட்டு ஜவ்வாது மலையில் உள்ள 40-க்கும்மேற்பட்ட கிராம மக்கள் நேற்று கருப்புக்கொடி ஏந்தி நூதனப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டு நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 40-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. 30 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு எஸ்டி பிரிவின்படி ஜாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அதற்கான நடவடிக் கையை அரசு எடுக்காததால் கடந்த மாதம் ஜவ்வாதுமலையில் 40 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இதில், மலைவாழ் மக்களுக்கு எஸ்டி ஜாதிச்சான்று வழங்காவிட்டால் முதற்கட்டமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்பது, 2-ம் கட்டமாக அரசு வழங்கிய ஆதார் அட்டை களை திருப்பி கொடுப்பது, 3-ம் கட்டமாக முற்றுகைப்போராட்டத் தில் ஈடுபடுவது, 4-ம் கட்டமாக வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஜவ்வாதுமலையில் உள்ள நெல்லிவாசல்நாடு, புங்கம் பட்டுநாடு, புதூர்நாடு ஆகிய மலை கிராமங்களிலும், ஏலகிரி மலை கிராமத்திலும் ஜாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி முதற்கட்டமாக வீடு களிலும், தெருக்களிலும் கருப்புக் கொடி ஏற்றியும் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மலைவாழ் மக்கள் நேற்று நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "எங்கள் கோரிக் கையை மாவட்ட நிர்வாகம் ஏற்கா விட்டால் அடுத்தவாரம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது அரசு வழங்கிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஒப்படைப்போம், அதற்கு அடுத்தப்படியாக பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம்’’ என்றனர்.