

கரோனா தாக்கத்தால் தீபாவளியன்று மக்கள் பட்டாசு வெடிப்பது குறைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கோவையில் காற்று மாசு அதிகரிக்கவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் எனத் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில், காற்றின் தரம், ஒலி அளவு குறித்து தீபாவளிக்கு முந்தைய நாட்கள் மற்றும் தீபாவளியன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
''ஒலி அளவைப் பொறுத்தவரை குடியிருப்புப் பகுதியில் 55 டெசிபல் அளவும், வர்த்தகப் பகுதியில் 65 டெசிபல் அளவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தீபாவளிக்கு முன்பு கவுண்டம்பாளையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 58.7 டெசிபலாகப் பதிவான ஒலி அளவு, தீபாவளியன்று 64.3 டெசிபலாகப் பதிவாகியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 9 டெசிபல் அதிகரித்துள்ளது. பெரிய அளவில் ஒலி மாசு அதிகரிக்கவில்லை.
இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்பு 56.5 டெசிபலாகப் பதிவான ஒலி அளவு, தீபாவளியன்று 63.2 டெசிபலாகப் பதிவாகியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடத் தீபாவளியன்று ஒலி மாசு அதிகரிக்கவில்லை. காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு முறையே 60 மற்றும் 100 மைக்ரோ கிராம்/ கன மீட்டர் வரை இருக்கலாம்.
தீபாவளியன்றும் அதற்குப் பிறகும் கவுண்டம்பாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் காற்று மாசு அதிகரிக்கவில்லை. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்டு காற்று மாசு, ஒலி மாசு ஆகிய இரண்டும் குறைவாக உள்ளன. கரோனா தாக்கத்தின் காரணமாக மக்கள் பட்டாசு வெடிப்பதைக் குறைத்துக் கொண்டதே இதற்கு முக்கியக் காரணம்''.
இவ்வாறு அவர்கள் கூறினர்.