Published : 16 Nov 2020 08:51 PM
Last Updated : 16 Nov 2020 08:51 PM

வடமாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் பரவுகிறதா?-ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத் துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய்விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி சுய விளம்பரத்தில் கவனம் செலுத்துகிறாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சமீபகாலமாக துப்பாக்கிகள் மூலம் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் யானைகவுனியில் கணவன், மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர் மருமகளுடன் வந்த ஆட்கள். இன்று பழனியில் 2 பேர் சுடப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவு செய்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

“தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பியுள்ளன. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை.

பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத் துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய்விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, சுய விளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கியக் கவனம் செலுத்துகிறாரா?”

இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x