Last Updated : 16 Nov, 2020 07:55 PM

 

Published : 16 Nov 2020 07:55 PM
Last Updated : 16 Nov 2020 07:55 PM

குற்றவியல் விசாரணையில் குறைபாடு: 4 ஆண்டுகளில் 304 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்

மதுரை

தமிழகத்தில் விசாரணை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் 2016 முதல் 304 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சொத்து தகராறில் 2010-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014-ல் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்து, பாலமுருகனை விடுதலை செய்தும், தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணையை பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை டிஜிபி தெரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. டிஜிபி சார்பில் சட்டம் ஒழுங்கு ஏஜி திருநாவுக்கரசு பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

குற்றவியல் வழக்குகளில் விசாரணையை சரியாக நடத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் செப். 15 வரை 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை திறமையை அதிகரிக்க போலீஸாருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. விசாரணையில் சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் விசாரணையின் தரத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது. இது தொடர்பான உத்தரவுகள், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும், தண்டனை விகிதம் குறையாமல் தடுக்கவும் உத்தரவுகள், சுற்றறிக்கையை முறையாக அமல்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பல்வேறு தவறுகள் நடந்துள்ளது. இருப்பினும் சம்பவம் நடைபெற்று 10 ஆண்டாகிவிட்டது. இனிமேல் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டால் பலன் கிடைக்காது. எனவே கொலையானவரின் மனைவி அன்னலெட்சுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x