Last Updated : 16 Nov, 2020 06:48 PM

 

Published : 16 Nov 2020 06:48 PM
Last Updated : 16 Nov 2020 06:48 PM

திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்; மொத்த வாக்காளர்கள் 22,60,439 பேர்

திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான 2020-ம் ஆண்டின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

’’வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 10,99,977 பேர், பெண்கள் 11,60,256 பேர், மூன்றாம் பாலினத்தவர் 206 பேர் என மொத்தம் 22,60,439 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த பிப்.14-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணை செய்து பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆண்கள் 2,974 பேர், பெண்கள் 3,468 பேர், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 6,448 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே காலனி ஆகிய பகுதிகளில் பணியாற்றியவர்கள் அந்த முகவரிகளில் வசிக்கவில்லை என்று அரசியல் கட்சியினரிடமிருந்து பெறப்பட்ட மனுவின் பேரில் களப் பணி மேற்கொள்ளப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. ஏதாவது பெயர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்களில் உரிய மனுவை அளித்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

43,115 பேர் நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக ஆண்கள் 21,897 பேர், பெண்கள் 21,209 பேர், மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் என மொத்தம் 43,115 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக மணப்பாறை- 3,377 பேர், ஸ்ரீரங்கம்- 4,389 பேர், திருச்சி மேற்கு- 5,367 பேர், திருச்சி கிழக்கு- 5,779 பேர், திருவெறும்பூர்- 10,153 பேர், லால்குடி- 3,331 பேர், மண்ணச்சநல்லூர்- 2,092 பேர், முசிறி- 2,499 பேர், துறையூர் (தனி)- 6,128 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அலுவலக நேரத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

01.01.2021 அன்றைத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றை இன்று முதல் டிச.15-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். மேலும், நவ.21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிச.15-ம் தேதி வரை பெறப்படும் மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, 2021, ஜன.5-ம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஜன.20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.’’

இவ்வாறு ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசுவநாதன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x