வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவையில் 29.70 லட்சம் வாக்காளர்கள்; 36,355 பேரின் பெயர் நீக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்டார். 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்டார். 
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவ.16-ம் தேதி) வெளியிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்துக்குட்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (16-ம் தேதி) வெளியிடப்பட்டது. பட்டியலை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டார். அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். 1.1.2021-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலைத் திருத்தம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதனடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ''இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 14,68,222 ஆண்கள், 15,02,142 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 369 பேர் என மொத்தம் 29,70,733 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 2,87,860 பேர், சூலூர் தொகுதியில் 3,04,026 பேர், கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,44,016 பேர், கோவை வடக்கு தொகுதியில் 3,25,486 பேர், தொண்டாமுத்தூர் தொகுதியில் 3,12,126 பேர், கோவை தெற்கு தொகுதியில் 2,46,182 பேர், சிங்காநல்லூர் தொகுதியில் 3,15,460 பேர், கிணத்துக்கடவு தொகுதியில் 3,10,978 பேர், பொள்ளாச்சி தொகுதியில் 2,22,944 பேர், வால்பாறை தொகுதியில் 2,01,655 வாக்காளர்கள் உள்ளனர்.

பெயர் நீக்கம்

கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலை ஒப்பிடும்போது, தற்போதைய சூழலில் 36,355 பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 15,165 பேரின் பெயர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

மேலும், தற்போதைய பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும் இன்று முதல் வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை, அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

நவம்பர் 22, 23 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக இணையதளம் மூலம் மனுக்களைப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.nvsp.in என்ற இணைய முகவரி மூலமாகவோ அல்லது voters helpline app என்ற செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in