Published : 16 Nov 2020 01:27 PM
Last Updated : 16 Nov 2020 01:27 PM

தடையால் ரூ.1000 கோடி பட்டாசுகள் தேக்கம்: கடும் சரிவை சந்தித்த பட்டாசு தொழில்

சிவகாசி

உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள், வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை என பல்வேறு நெருக்கடிகளால் இந்த ஆண்டு ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்க மடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர். பட்டாசுத் தொழில் அடுத்த தீபாவளிக்காவது தலைநிமிருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்தப் பட்டாசுத் தேவையில் 95 சதவீதத்தை விருதுநகர் மாவட்ட ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கு, நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு போன்ற பல்வேறு காரணங்களால் சிவகாசி பட்டாசுத் தொழில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால் பட்டாசுகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தன. மேலும், தடையை மீறியும், நேரத்தைக் கடந்தும் பட்டாசு விற்பனை மற்றும் வெடித்ததாக ஏராளமானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகளுக்காக வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் ஒன்றரை மாதத்துக்கும் மேலாகப் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதனால், பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, அதை நம்பிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

பின்னர், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதும் மீண்டும் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், கடைசி நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை மற்றும் நேரக்கட்டுப்பாடு காரணமாக ரூ.1,000 கோடி அளவிலான பட்டாசு விற்பனையாகவில்லை. இதனால் ஏற்படும் இழப்பிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமம், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x