Published : 16 Nov 2020 12:10 PM
Last Updated : 16 Nov 2020 12:10 PM

குமரி மாவட்ட ரயில் வழித்தடங்களைக் கேரளாவிலிருந்து பிரித்திடுக: இடைத்தேர்தலை முன்னிட்டு எழும் கோரிக்கை


காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்ட ரயில்வே பிரச்சினைகள் கவனம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமார் இறப்பைத் தொடர்ந்து குமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்நோக்கி நிற்கிறது. அநேகமாக பிப்ரவரி இறுதிக்குள் அங்கே இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸே மீண்டும் களமிறங்கும் எனத் தெரிகிறது. அதேபோல், பொதுத் தேர்தலில் தொகுதியைக் காங்கிரஸிடம் பறிகொடுத்த பாஜகவே அதிமுக கூட்டணி வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து இப்போதே கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதில், ரயில்வே திட்டங்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் எட்வர்ட் ஜெனி ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.
“கேரளத்தில் இருந்து பிரிக்கப்பட்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் கேரளத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம் ஆகும். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் தமிழகப் பகுதிகள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

குமரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும், தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிநிகளும் இந்தக் கோட்டத்தைப் பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் கடந்த 40 ஆண்டுகளாக எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினைகள் பற்றி தேர்தல் நேரத்தில் பேசுதோடு நின்றுவிடுகிறது.

குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரி மாவட்ட மக்கள் ரயில்வே வளர்ச்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, இங்கிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் குமரி மக்களின் பயன்பாட்டை நிராகரித்து, கேரளாவில் உள்ள பயணிகளின் வசதியை மையமாக வைத்தே பட்டியலிடப்பட்டுள்ளன. ரயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் மற்றும் செல்லும் திசைகள் குமரி மக்களுக்குப் பாதகமாகவும் கேரளா மக்களுக்குச் சாதகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கி.மீ. தூரம் உள்ள இருப்புப் பாதை வழித்தடத்தில் கன்னியாகுமரி- நாகர்கோவில் - திருவனந்தபுரம் 87 கி.மீ தூரமும், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ தூரமும் ஆக மொத்தம் 161 கி.மீ தூரம் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் சுமார் 25 சதவீதம் நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் வருகின்றது. இதில் தமிழகத்தில் சுமார் 130 கிமீ இருப்புப் பாதையம், கேரளாவில் 31 கி.மீ தூர இருப்புப் பாதையும் உள்ளது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை அதாவது நாகர்கோவில் துணைக் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி- நாகர்கோவில் - நேமம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வரை உள்ள பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

இதைப்போல் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள பகவதிபுரம் (செங்கோட்டை) – புனலூர் - கொல்லம் ரயில் பாதையை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு இரண்டு வழித் தடங்களையும் நிர்வாக வசதிக்காக கோட்டத்தை மாற்றம் செய்யும் போது எந்த ஒரு கோட்டத்துக்கும் இழப்பு இருக்காது. ரயில்வே வாரியம் இந்த பகுதிகளில் உள்ள இருப்புப் பாதை வழித்தடங்களை நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்க தெற்கு ரயில்வேக்கு இதுவரை ஐந்து முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.

குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படும் என குமரி தொகுதியில் இதுவரை போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதி கொடுத்து வந்துள்ளனர். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தப் பிரச்சினையை அவர்கள் அடியோடு மறந்து விடுகிறார்கள். 1979-ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டத்தை உருவாக்கும்போது குமரி அனந்தன் நாகர்கோவில் தொகுதி எம்.பி.யாக இருந்தார். அதன் பிறகு 1980 முதல் 1999 டென்னிஸும், 1999 முதல் 2004 வரை பொன்.ராதாகிருஷ்ணனும், 2004 முதல் 2009 வரை கம்யூனிஸ்டு கட்சியின் பெல்லார்மினும் இங்கு எம்.பி.யாக இருந்தார்கள். இவர்களில் பொன்னார் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இதேபோல், 2009 முதல் 2014 வரை திமுகவைச் சேர்ந்த ஹெலன்டேவிட்சனும், 2014 முதல் 2019 வரை மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனும் அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை சார்ந்த வசந்தகுமாரும் இங்கே எம்.பி.யாக இருந்தார்கள். இவர்கள் யாராலும் குமரி மாவட்டத்தின் நீண்ட கால பிரச்சினையான ரயில்வே கோட்டத்தை மாற்றும் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

தற்போது பாராளுமன்ற இடைதேர்தல் வர இருக்கின்றது. தேர்தல் தொடங்கும் நேரத்தில் மீண்டும் இந்த கோட்டப் பிரச்சினை விவாதப் பொருளாக மாறியுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பாக கன்னியாகுமரி தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறது. இந்த கரோனா காலத்தில் தொற்று பரவாமல் தடுக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு ஒரு விதமாகவும் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் வேறு விதமாகவும் பின்பற்றி ரயில்வே அதிகாரிகள் செயல்பட்டனர். இது மட்டுமில்லாமல் நாகர்கோவில் டிப்போவில் உள்ள ரயில் பெட்டிகளை கேரளாவுக்குக் காலியாக கொண்டு சென்று, கரோனா பயணிகளுக்கு என சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் மொபைல் செயலி வழியாக டாக்சி புக் செய்து பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில்கூட இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையத்திலிருந்து அதிக தூரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் அமைத்துள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடமிருந்து அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை விட அதிக கட்டணத்தை தங்கள் விருப்பம் போல் வசூலிக்கின்றனர்.

இதைத் தடுப்பதற்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரிபெய்டு ஆட்டோ வசதி செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயணிகளால் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் இந்த வசதியைத் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளால் செய்துதர முடியவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் சரி செய்துகொடுக்க இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் ஏனோ அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்” என்று சொன்னார் எட்வர்ட் ஜெனி.

தேர்தலுக்குத் தேர்தல் பேசப்படும் கோரிக்கையாக இருக்கும் இந்தப் பிரச்சினை இப்போது இடைத் தேர்தலுக்கு முன்பாகவும் எழுந்திருக்கிறது. குமரி, நெல்லை ரயில் வழித்தடங்களை திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x