தஞ்சையில் பொதுப்பணித் துறை அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை

தஞ்சையில் பொதுப்பணித் துறை அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை
Updated on
1 min read

தஞ்சையில் பொதுப்பணித் துறை அதிகாரி வீட்டில் இன்று காலை 41 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் பொதுப்பணித் துறையில் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தற்சமயம் திருச்சியில் குடியிருந்து வருகிறார்.

தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து இன்று (16-ம் தேதி) தஞ்சையில் உள்ள வீட்டிற்கு ராமமூர்த்தி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் தனது மகள் கல்யாணத்திற்காக வைத்திருந்த 41 பவுன் நகை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து திருட்டு குறித்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ராமமூர்த்தியின் வீட்டிலுள்ள சிசிடிவி கேமரா சோதனை செய்யப்பட்டது. அதில் முன்பக்க கேமராக்களை உடைத்து, சிசிடிவி காட்சியின் பதிவுகள் சேமிக்கப்படும் பெட்டியைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால் காவல்துறையினர் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு, கொள்ளை கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in