Published : 16 Nov 2020 11:34 AM
Last Updated : 16 Nov 2020 11:34 AM

பழநியில் இடத்தகராறில் துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம்; திரையரங்கு உரிமையாளர் கைது

பழநியில் இடத்தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய திரையரங்கு உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இளங்கோவனுக்கு சொந்தமாக பழநி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி இடம் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகே பிரபல தொழிலதிபரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இளங்கோவன் இடத்தில் தனக்குச் சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்கச் சென்றபோது இடத்திற்கும் நுழையக்கூடாது என்று தொழிலதிபர் நடராஜன் தெரிவித்ததால், இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆவேசமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதாகத் தெரிகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில் சுப்பிரமணி வயிற்றிலும், பழனிச்சாமி இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொழிலதிபர் நடராஜன் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற இளங்கோவன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த பழநி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நடராஜனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நடராஜன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரில் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ள பழனிச்சாமியை கோவை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

தற்காப்புக்காக வழங்கிய துப்பாக்கியை விவசாயிகள் மீது சுட்டுத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x