Last Updated : 16 Nov, 2020 03:12 AM

 

Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை இல்லை; தமிழகத்தில் குறைந்துவரும் ‘உடல் உறுப்பு தானம்’ - பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை, நடுத்தர மக்கள்

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் ஆண்டுதோறும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் குறைந்து வருகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் கடந்த 2008-ல்விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல்உறுப்பு தானத்துக்குப் பிறகு, உறுப்பு தானம் குறித்த விழிப் புணர்வு தமிழகத்தில் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுதிட்டத்தை உருவாக்கியது. பின்னர்தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்றுசிகிச்சை ஆணையம் உருவாக்கப் பட்டது.

முதலிடத்தில் தமிழகம்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆண்டுதோறும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கடந்த 2016-ல் மூளைச்சாவு அடைந்த 185 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதுவே, 2017-ல் 160 ஆகவும்2018-ல் 140 ஆகவும் 2019-ல் 127ஆகவும் குறைந்தது. இந்த ஆண்டில் இதுவரை 40 பேரின் உடல் உறுப்புகள் மட்டுமே தானம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளிலேயே உறுப்பு தானம் செய்வதும் பெறுவதும் அதிகமாக உள்ளது.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் கூறியதாவது:

தற்போது உறுப்பு தானம் குறைந்ததற்கு முக்கிய காரணம் கரோனாதொற்று. ஒருவர் எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைகிறாரோ, அவரின் உறுப்புகளை அதே மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பதிவு செய்த நோயாளிகளுக்கு பொருத்தலாம். பதிவு மூப்பை பார்க்கத் தேவையில்லை. சில உறுப்புகளை வேறு மருத்துவமனைகளுக்கும் கொடுக்கலாம். அவை பதிவு செய்து பொது பட்டியலில் காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பொருத்தப்படுகின்றன. இதைத்தான் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை மட்டுமே உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. மற்ற அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு சொல்லும்படியாக இல்லை.ஏழை மற்றும் நடுத்தர மக்களேஅதிகளவில் உறுப்பு தானம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் தானம் செய்வது மிக மிகக் குறைவு. அதேநேரத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதில்லை. காத்திருந்து, காத்திருந்து பலர் இறந்துவிடுகின்றனர். வசதி படைத்தவர்களுக்கு உடல் உறுப்புகள் கிடைக்கின்றன.

இலவசமாக பொருத்த வேண்டிய உறுப்புகளை, சில தனியார் மருத்துவமனைகள் மறைமுகமாக லட்சக்கணக்கில் பணத்துக்கு விற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை. இதுவே உறுப்பு தானம் குறைய முக்கிய காரணமாகும்.

உறுப்பு தானம் சட்ட விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். தானமாக பெறப்படும் உறுப்புகள்அனைத்தையும் பதிவு மூப்புஅடைப்படையில் முறையாகவழங்கவேண்டும். அந்தந்த மருத்துவமனைகள் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக்கூடாது. உறுப்புகளை விற்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பு தானம் பெறும்வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இலவசமாக பொருத்த வேண்டிய உறுப்புகளை, சில தனியார் மருத்துவ மனைகள் மறைமுகமாக லட்சக்கணக்கில் பணத்துக்கு விற்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x