

தமிழகத்தில் அம்பத்தூர், செங்குன்றம், சேலம், கோவை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 இடங்களில் ரூ.100 கோடியில் நவீன குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
விவசாய விளைபொருட்கள் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்போது உரிய விலை கிடைக்கவில்லை என்று சொல்லி அவற்றை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். .
இத்தகைய சூழலைத் தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 13,565 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 111குளிர்பதன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொடர்மேலாண்மைத் திட்டத்தின் கீழ்3,908 மெட்ரிக் டன் கொள்ளளவுகொண்ட 56 குளிர்பதனக் கிடங்குகள் கடந்த ஆண்டு கட்டப்பட்டன. இவை கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருச்சி மாவட்ட விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மேலும் 27 உழவர் சந்தைகளில் 2 மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்குகளும் உள்ளன.
பெருகிவரும் குளிர்பதன வசதிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், பெரிய வணிக மற்றும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நபார்டு நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் 6 குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாய் வளாகம் (5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு), செங்குன்றம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் (2 ஆயிரம் மெட்ரிக் டன்), சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் (ஆயிரம் மெட்ரிக் டன்), கோவை, சூலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் (5 ஆயிரம் மெட்ரிக் டன்), தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் (2 ஆயிரம் மெட்ரிக் டன்), மதுரை மாவட்டம் (5,500 மெட்ரிக் டன் கொள்ளளவு) ஆகிய 6 இடங்களில் மொத்தம் 20,500 மெட்ரிக் டன் கொள்ளளவு நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
மேலும், 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 80 சூரியசக்தியுடன் இயங்கும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்த சிறிய அளவிலான கிடங்குகள் பண்ணை அளவில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.