Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

தடை செய்யப்பட்டாலும் பயன்பாட்டில் இருக்கும் ‘பப்ஜி’ ‘கேம்’; செயலிகளில் தகவல் பரிமாறும் தீவிரவாதிகள்: கண்காணிக்க முடியாமல் பாதுகாப்பு துறை திணறல்

சென்னை

செல்போன் விளையாட்டு செயலிகளை தீவிரவாதிகள் தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தி வருவதால், அவற்றை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்பு துறை ஈடுபட்டுள்ளது.

செல்போன், சாட்டிலைட் போன், இணையதளம், வயர்லெஸ் கருவிகள் என தீவிரவாதிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான தகவல் தொடர்பு சாதனங்களையும் இடைமறித்து கேட்கும் வகையில் திறன் மிக்கதாக மத்திய பாதுகாப்பு துறை உள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் தகவல் தொடர்பை துண்டிக்க, இணையதள சேவையை நிறுத்தி வைப்பதே போதுமானதாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள், தகவல் தொடர்புக்கு ‘ஃபயர் சாட்’ (Fire Chat) என்ற செல்போன் செயலியை பயன்படுத்தினர். இதை ராணுவம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மருத்துவம் தொடர்பான செல்போன் செயலியை வடிவமைத்துக் கொடுத்ததாக பெங்களூருவை சேர்ந்த பல் மருத்துவரை என்ஐஏ கடந்த மாதம் கைது செய்தது. தீவிரவாதிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களை வழங்கியது தொடர்பாக மேலும் சிலரும் என்ஐஏ பிடியில் சிக்கினர். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:

செல்போனில் விளையாடுவதற்காக பப்ஜி,ஃப்ரீ ஃபயர், சூட்டர், கமாண்டோ, ஸ்க்வாடுஎன ஆயிரக்கணக்கான ஆக்‌ஷன் செயலிகள் உள்ளன. வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே பப்ஜி, ஃப்ரீ ஃபயர் செயலிகளில் விளையாட முடியும். இதுபோன்ற விளையாட்டு செயலிகளை தீவிரவாதிகள் தற்போது தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்துகின்றனர். இம்மாதிரியான தகவல் தொடர்பை கண்காணிப்பதும், இடைமறித்து கேட்பதும் பாதுகாப்பு துறைக்கு சவாலாக உள்ளது.

பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்தாலும், எந்த மாற்றமும் இல்லாமல் பலரும்தொடர்ந்து விளையாடி வருகின்றனர். எனவே, விளையாட்டு செயலிகளை கையாள்வது, கண்காணிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x