Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவ.21-ல் சென்னை வருகை: தேர்தல் பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

அமித்ஷாவுடன் ரஜினி. (கோப்புப்படம்)

சென்னை

தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா வரும் 21-ம்தேதி சென்னை வருகிறார்.

தமிழக அரசு சார்பில் சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடக்கஉள்ளது. இதில் அமித்ஷா பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு நிகழ்ச்சிக்காக சென்னை வரும் அவர், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பணிகள், கூட்டணி, அதிமுக - பாஜக உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜகதலைவர் எல்.முருகனிடம் கேட்டபோது, “நான் தமிழக பாஜக தலைவரான பிறகு, முதல்முறையாக அமித்ஷா சென்னை வருகிறார். எனவே, அவருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உட்பட200 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார். பின்னர் பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க, வரும் பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அமித்ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியலில் மாற்றத்துக்கு வழி வகுக்கும்’’ என்றார்.

ரஜினியுடன் அமித்ஷா சந்திப்பு?

சென்னை வரும் அமித்ஷா நடிகர்ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாககூறப்படுகிறது. ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரிக்கும்போது அரசியல் குறித்தும் அமித்ஷா பேசஇருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x