

பிஹார் தேர்தல் முடிவுகளால் கூட்டணி வியூகத்தை மாற்றியமைக்க திமுக ஆலோசனை நடத்தி வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சுழற்சி முறையில் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியைவிட பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 15 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அதிகம் பெற்றது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை அதாவது மெகா கூட்டணியைவிட 15 இடங்களை அதிகம் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
மிக மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மெகா கூட்டணி பறிகொடுத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் இருந்த ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை பாஜக கூட்டணியில் இணைந்ததும், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் இ இடிஹதுஸ் முஸ்லிமின் கட்சி 1.24 சதவீத வாக்குகளைப் பெற்று 5 தொகுதிகளில் வென்றதும்தான் மெகா கூட்டணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
காங்கிரஸ், 3 இடதுசாரி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருந்ததால் சிறிய கட்சிகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியேற்றினார். அதுபோல மஜ்லீஸ் கட்சியையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுபோன்ற நிலைமை தமிழகத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கூட்டணி வியூகங்களை மாற்ற திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீதம் அதாவது 4.41 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக பறிகொடுத்தது.
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 117 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற வேண்டும் என திமுக கருதுகிறது. அதற்காக 2016-ல் போட்டியிட்ட 173 தொகுதிகளுக்கும் குறையாமல் போட்டியிட திமுக விரும்புகிறது. ஆனால், 10 கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அது அவ்வளவு எளிதானது அல்ல.
அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது வட மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று திமுக நினைக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தலா 4 சதவீத வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் பாதிக்கும் என்ற கருத்தும் உள்ளது. கமலும், சீமானும் பிஹாரின் மஜ்லீஸ் கட்சியைப் போல ஆகி விடக்கூடாது என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதும் குறித்தும் திமுக தலைமைதீவிர ஆலோசனையில் இருப்பதாகஅக்கட்சியின் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 2016-ல் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தற்போது பிஹாரில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெல்லும்போது காங்கிரஸ் 25 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவது பேசுபொருளாகி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘பல தொகுதிகள் மீண்டும் மீண்டும் ஒரே கட்சிக்கே ஒதுக்கப்படுகின்றன. அதனால் காங்கிரஸ் வென்றால் இனி அந்தத் தொகுதியே திமுகவுக்கு கிடைக்காது. நாமும் எம்எல்ஏ ஆக முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதால் திமுகவினர் சரிவர வேலை செய்வதில்லை. ஒரு தொகுதியை தொடர்ந்து ஒரே கட்சிக்கு ஒதுக்காமல் சுழற்சி முறையில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பிஹார் தேர்தல் முடிவுகளால் எந்த ஒரு சிறிய கட்சியையும் புறக்கணிக்காமல் கூட்டணி வியூகம் அமைக்க வேண்டிய நிலைக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.