

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மது வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை முதலே காவல்துறையினர் டாஸ்மாக் கடைகளின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மது அருந்துவோரும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்தது முதலே மதுபானங்களை வாங்க வந்தனர். மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் அலைமோதியது. பலர் 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதேபோல், தீபாவளி பண்டிகை தினத்தன்றும் விற்பனை அதிகமாக இருந்தது.
இதன்படி, கடந்த 13, 14 ஆகிய 2 நாட்களும் சேர்த்து அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.103.82 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.95.47 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.94.36 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.87.58 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.84.56 கோடி மதிப்பில் விற்பனை நடந்துள்ளது.
இதன் மூலம், 2 நாட்களில் மொத்தம் ரூ.465.79 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.456.15 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இதனால் கடந்த ஆண்டைவிட ரூ.9.64 கோடி அதிகம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க வந்தவர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்பட்டது.