

ஊழல் புகார்கள் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சுரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்துணைவேந்தர் பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
9 மாதங்களாக நிலுவை
சுரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கும் மேல் அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்தது ஏன்?
ரூ.280 கோடி ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித் துறையின் அரசு ஆணையில், “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்தபிறகும் முதல்வர் பழனிசாமியும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் துணைவேந்தரையும், சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்?
திமுக ஆட்சியில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அதிமுக ஆட்சியின்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சுரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் நவ.16-ல் (இன்று) தனது விசாரணையைத் தொடங்கப் போகிறது என்று செய்தி வரும் நிலையில் துணைவேந்தரை உடனடியாக இடைநீக்கம் செய்வதுதான் நேர்மையான, நியாயமான விசாரணைக்கு வழி வகுக்கும்.
ஆணைய கட்டுப்பாட்டில்
ஆகவே, இனியும் தாமதிக்காமல் அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவியில் இருந்து சுரப்பாவை உடனடியாக முதல்வர் பழனிசாமி இடைநீக்கம் செய்ய வேண்டும். ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க, உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.