

உரிய விலை கிடைக்காததால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, முத்தூர், காளிப்பாளையம், நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மரவள்ளிக் கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வறட்சியை தாங்கி வளரும் பயிர் என்பதால் ஆர்வமுடன் பயிரிடுகின்றனர். தற்போது, மரவள்ளிக் கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி வடுகப்பாளையம் பகுதியில் இருந்து உணவுத் தேவைக்காக மும்பை, கேரளாவுக்கு மரவள்ளிக் கிழங்கு அனுப்பப்படுகிறது. மற்ற பகுதிகளில் இருந்து ஜவ்வரிசி உற்பத்திக்காக சேலத்துக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் ரூ.12000-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு டன் ரூ.8000-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து வடுகப்பாளையத்தைச் சேர்ந்த மரவள்ளிக் கிழங்கு விவசாயி சேதுபதி கூறும்போது, "இடைத்தரகர்களின் தலையீட்டால் மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு டன் மரவள்ளி கிழங்குக்கு ரூ.10000 குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்க அரசு முன்வர வேண்டும். இப்பகுதியில் மரவள்ளி அதிகம் பயிரிடப்படுவதால், கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்து, அதன்மூலம் கொள்முதல் செய்தால் இடைத்தரகர்கள் இன்றி சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியும்" என்றார்.