Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

கரோனா தொற்று பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற மயிலந்தீபாவளி பண்டிகை ரத்து

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்த மயிலந்தீபாவளி, கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் நெகமம் அருகே வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இந்நாளை ‘மயிலந்தீபாவளி’ என்று அழைக்கின்றனர். வடசித்தூர் பகுதியில் இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம் குடும்பத்தினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இரண்டு மதத்தினரும் உறவினர்கள்போல பழகி வருவதால், ஆண்டுதோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவுக்காக, வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள், விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள் அமைக்கப்பட்டு, ஊரே விழாக்கோலத்தில் காணப்படும். வடசித்தூர் பகுதியில் வசிக்கும் இந்து, முஸ்லிம் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் மயிலந்தீபாவளியை கொண்டாடி மகிழ்வார்கள். மேலும், வடசித்தூர் கிராமத்தில் இருந்து திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள், புகுந்த வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு தாய் வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வந்துவிடுவார்கள். இது மற்ற கிராமங்களில் திருமணமாகி சென்ற பெண்களுக்கு கிடைக்காத சிறப்பாக இப்பகுதி பெண்கள் கருதி வருகின்றனர்.

இதேபோல, வடசித்தூரை சேர்ந்த முஸ்லிம்கள் வெளியூர்களில் வசித்தாலும், இந்த பண்டிகைக்கு குடும்பத்துடன் வடசித்தூருக்கு வந்துவிடுவர்.

இதுகுறித்து வடசித்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவராஜ் கூறும்போது, "பல தலைமுறைகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த மயிலந்தீபாவளி பண்டிகை, இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x