தமிழக அரசு துறைகளில் புதிதாக ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ பதவி உருவாக்கம்: தட்டச்சு படித்தவர்களுக்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் தட்டச்சு, கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு அரசுப் பணி கிடைக்க புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என பல்வேறு நிலைகளில் குரூப்-சி பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அலுவல் ரீதியிலான தகவல்களை ஆவணப்படுத்துவது, கடிதங்கள், அறிக்கைகள் தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளை தட்டச்சர்கள் செய்கின்றனர். முன்பு தட்டச்சு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும்தற்போது பெரும்பாலும் கணினியிலேயே செய்யப்படுகின்றன. இதனால், தட்டச்சர்களும் தட்டச்சுசெய்வது, கோப்புகளில் தகவல்களை உள்ளீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கணினி மூலமாகவே செய்கின்றனர்.

மத்திய அரசு அலுவலகங்களில் தட்டச்சர் பதவியானது ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ என்ற பதவியாக மாற்றப்பட்டு அதற்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழக அரசுஅலுவலகங்களில் தட்டச்சு இயந்திரங்களே இல்லாத நிலையிலும் கூட, தட்டச்சர் பதவி அதே நிலையில் தொடர்கிறது. 10-ம் வகுப்புதேர்ச்சியுடன், தட்டச்சில் தமிழ்,ஆங்கிலத்தில் ஹையர் கிரேடுதேர்ச்சி அல்லது தமிழ், ஆங்கிலத்தில் ஒன்றில் ஹையர் கிரேடு மற்றொன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி என்பது அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியும் அவசியம். இத்தகுதி இல்லாவிட்டாலும் தட்டச்சர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவம் முடிவதற்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்ற புதிய பதவியை உருவாக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்பதவிக்கு பட்டப் படிப்புடன்,தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு தேர்ச்சியும், அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சி பெற்ற சான்றிதழும் அடிப்படை கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கண்ட கல்வித் தகுதிகளுடன் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆணையத்தின் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து தமிழக பொதுத் துறை செயலாளர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு பணியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு பிளஸ்2 கல்வித் தகுதியுடன், கம்ப்யூட்டரில் மணிக்கு 8,000 ஸ்ட்ரோக் (Key Depressions) தட்டச்சு செய்யும்திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றபிறகு இந்த திறன் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பணியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், கம்ப்யூட்டரில் மணிக்கு 8,000 ஸ்ட்ரோக் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in