

கும்மிடிப்பூண்டி அருகே பேருந்துஎட்டிப்பார்க்காத அன்னப்பநாயக்கன் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கைகளோடு பேருந்து வசதிக்காக ஏங்குகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே அன்னப்பநாயக்கன் குப்பம், மேல் முதலம்பேடு, கீழ்முதலம்பேடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களில் இதுவரை பேருந்தே எட்டிப்பார்க்கவில்லை என, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இப்பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஹரிதாஸ், மீரா, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் தெரிவித்ததாவது:
மேல்முதலம்பேடு உள்ளிட்ட 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அன்னப்பநாயக்கன் குப்பம், ராமநாயக்கன் கண்டிகை, பாலிகாபேட்டை, அரிகத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை கவரைப்பேட்டையில் இருந்து, 7 கி.மீ தூரத்தில் உள்ள இந்தகிராமங்களை இதுவரை பேருந்துஎதற்காகவும் எட்டிப்பார்த்ததில்லை.
இக்கிராமங்களில் வசிப்போர் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என்பதால், செங்கல் சூளைஉள்ளிட்ட பணிகளுக்குச் சென்றுவரும் லாரிகள், சரக்கு வாகனங்களிலும், ரூ.15 கட்டணத்தில் ஷேர் ஆட்டோ, வேன்களில் கவரைப்பேட்டைக்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து பேருந்து, ரயில்கள் மூலம் பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் பயனில்லை. இனியாவது, கவரைப்பேட்டை முதல் அன்னப்பன்நாயக்கன் குப்பம் வரை பேருந்துகள் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
அதேபோல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, பேரம்பாக்கம், கடம்பத்தூர் வழியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், தக்கோலம், மணவூர் பகுதிகளுக்கு 160, 162, டி19, டி2 ஆகிய 4 அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட பேருந்துகளும், கடம்பத்தூரிலிருந்து, சென்னைக்கு 138ஏ என்ற மாநகரப் பேருந்தும் இயங்கி வந்தன.
செலவு அதிகரிப்பு
போதிய வருமானம் இல்லை என இவற்றை படிப்படியாக குறைத்து, கடந்த ஓராண்டாக முற்றிலும் இல்லாமல் செய்துவிட்டனர். இதனால்,பேரம்பாக்கத்தில் இருந்து, ரூ.30கட்டணத்தில் சென்றுவந்த பொதுமக்கள், ஷேர் ஆட்டோக்களில் ரூ.120 வரை செலவழிக்க வேண்டியுள்ளது என்கின்றனர்.
இதுதொடர்பாக, விழுப்புரம் கோட்ட பொன்னேரி பணிமனை,திருவள்ளூர் பணிமனை அதிகாரிகள் கூறும்போது, ''கவரைப்பேட்டை- அன்னப்பன்நாயக்கன் குப்பம் மார்க்கத்தில் அரசு பேருந்துகளை இயக்கவும், பேரம்பாக்கம், கடம்பத்தூர் வழியாக திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.