

சென்னையில் முண்டகக் கண்ணியம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையம் புதன் கிழமை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக, கலங்கரை விளக் கம் ரயில் நிலையத்துக்கும் திருமயிலை ரயில் நிலையத்துக்கும் இடையே ரூ.30 கோடி செலவில் பிரமாண்டமாக புதிதாக பறக்கும் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர்தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். அதன்படி, இப்புதிய ரயில் நிலையத்துக்கு முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.
இப்புதிய ரயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப் பட்டது. அதனால், அந்தப் பகுதி பொது மக்களும், இவ்வழியே தினசரி பயணம் செல்லும் பயணிகளும் பெரிதும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தையும் சேர்த்தால், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
“புதிய ரயில் நிலையத்தில் மற்ற ரயில் நிலையங்களில் இருப்பதைப் போல கார் பார்க்கிங், சைக்கிள், டூவீலர் பார்க்கிங், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஆகியன உள்ளன.
முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருப்பதால் சுமார் அரை கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.