

ஒகேனக்கல்லில் தீபாவளியை ஒட்டிய விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன் தினம் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், சுற்று வட்டாரப் பகுதி மழை காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று விநாடிக்கு 9000 கன அடி என்ற அளவுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிக் குளியல், பரிசல் பயணம் போன்றவற்றை மேற்கொள்ள மிதமான நீர்வரத்து மிகவும் பொருத்தமாக அமையும். தீபாவளி பண்டிகையை ஒட்டிய விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் திரண்டனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் நேற்று காலை முதலே ஒகேனக்கல் பரபரப்பாக காணப்பட்டது. ஓட்டல் உள்ளிட்ட கடை கள், தள்ளுவண்டி கடைகள் உட்பட வர்த்தக மையங்கள் அனைத்திலும் நேற்று வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. மீன் சமைத்துக் கொடுக்கும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க நேரமின்றி இயங்கும் அளவுக்கு சுற்றுலா பயணிகள் சார்பில் உணவு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்தது.
இதமான மழையில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து கரை திரும்பினர். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் இடத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் காத்திருந்து மசாஜ் செய்து கொண்டனர். பிரதான அருவியிலும், காவிரி ஆற்றிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதை தடுக்கவும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்கவும், கரோனா தொற்று விதிமுறைகளான சமூக இடைவெளி, முகக் கவசம் போன்றவற்றை பின்பற்றச் செய்யும் விதமாகவும் காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினரும் தொடர் ரோந்துப் பணிகளிலும், கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.