

வளசரவாக்கத்தில் பெண் நடன இயக்குநர் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதான புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் வள்ளியம்மை நகரில் வசிப்பவர் லலிதா மணி (48). திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக இருக்கிறார். இவரது வீடு 3 தளங்களை கொண்டது. தரைத்தளத்தில் தங்கியிருக்கும் அவர், மற்ற தளங்களை வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் லலிதாமணி செடிகள் வளர்த்து வருகிறார். இச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளை அவர் வளர்ப்பதாக வளசரவாக்கம் போலீஸாருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து லலிதாமணி வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பெரிய தொட்டியில் பயிரிடப்பட்டிருந்த 5 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறியதாவது:
விசாரணையின்போது லலிதா மணி, தான் மொட்டை மாடிக்கு செல்வதில்லை. கஞ்சா செடி களையும் வளர்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். அங்கு வாட கைக்கு குடியிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘நாங்கள் யாரும் கஞ்சா செடிகளை வளர்க்க வில்லை லிதாமணியின் உறவினர் அபிஷேக் (30) என்பவருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது. அவர்தான் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்திருக்கிறார். அவர் வீட்டு உரிமையாளரின் உறவினர் என்பதால், அவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை’ என்றார்கள். இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
இந்நிலையில், லலிதாமணியின் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்ததாக கூறப்படும் அபிஷேக் தலைமறைவாகி விட் டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.