

மின் நுகர்வு குறைவு, போது மான மின் உற்பத்தி போன்ற காரணங்களால் தொழிற்சாலை களுக்கான 90 சதவீத மின் கட்டுப் பாடு தளர்வு நீட்டிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சில ஆண்டு களுக்கு முன்பு மின் உற்பத்தி குறைவாகவும் பயன்பாடு அதிக மாகவும் இருந்ததால் வரை யறுக்கப்பட்ட மின்தடை அமலில் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் வீடுகள், தாழ்வு மின் அழுத்த இணைப்புகளுக்கான வரையறுக்கப்பட்ட மின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் அமலில் இருந்த 20 சதவீத மின் கட்டுப்பாடு கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
மேலும் உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் (மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) அமலில் இருந்த 90 சதவீத கட்டுப்பாடு, கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தளர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மின் கட்டுப்பாடு தளர்வுக்கான காலக்கெடு செப்டம்பரில் முடிவடைந்தபோதும், மீண்டும் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது காற்றாலை சீசன் முடிந்துவிட்டது. மிகக் குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே காற்றாலைகளில் இருந்து கிடைக்கிறது. நீர் மின் நிலையங்களில் இருந்தும் போதுமான மின்சாரம் இல்லை. ஆனால், அனல் மின் நிலை யங்களில் இருந்தும் (3,900 மெகாவாட்), மத்திய அரசு ஒதுக்கீடு (3,200 மெகாவாட்), தனியார் மின் கொள்முதல் (2,400 மெகாவாட்) மின்சாரம் சராசரியாக கிடைத்து வருகிறது. இதன்மூலம் மின் நிலைமை சரிசெய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்டில் மின் நுகர்வு 30 கோடி யூனிட்டை தாண்டியது. தற்போது பருவமழைக் காலம் என்பதால் 27 கோடி யூனிட் அளவுக்கே மின் நுகர்வு உள்ளது.
எனவே, மின் பற்றாக்குறை இல்லை. மின் தடையும் இல்லை. இதன் காரணமாக, தொழிற்சாலைகளுக்கான மின் கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.