

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ரொக்கப் பண உதவி செய்து, உற்பத்தி தொடங்க உதவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:
"விருதுநகர் மாவட்டப் பொருளாதாரத்தில் பட்டாசு உற்பத்தி பெரும் பங்கு வகித்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை மட்டுமே இதன் முதன்மை சந்தையாக இருக்கிறது. நடப்பாண்டு பட்டாசு வெடிப்பதில் வெளிப்படும் புகை காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதாகக் கூறி பசுமைத் தீர்ப்பாயமும், பல்வேறு மாநிலங்களும் பட்டாசு வெடிக்கத் தடை விதித்தும், நேரக் கட்டுப்பாடு விதித்தும் உத்தரவுகளை வெளியிட்டன.
இதன் காரணமாக, சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளார்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி செய்த பட்டாசுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் ஆங்காங்குள்ள சிறு மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகித்துவிட்டனர். இந்த நிலையில், அரசின் தடையுத்தரவுகள் வெளியானதால் பட்டாசு விற்பனை தடைபட்டு தேங்கிவிட்டன.
பட்டாசு வர்த்தகத்தில் விற்பனை செய்த பிறகுதான் உற்பத்தியாளருக்குப் பணம் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. பெருமளவில் கடன் பட்டு பட்டாசுகளை உற்பத்தி செய்து அனுப்பிய சிறு உற்பத்தியாளர்கள் அனுப்பி வைத்த பட்டாசுகளுக்குப் பணம் திரும்ப வராமல் சுமார் 500 கோடி ரூபாய் வரை தேங்கி விட்டதாகவும், அது வருவதற்கான வாய்ப்பும் இல்லை என்பதால் மறு உற்பத்திக்கு தொழிற்கூடங்களை திறக்க முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும், தொழிலையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ரொக்கப் பண உதவி செய்து, உற்பத்தி தொடங்க உதவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.