

ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகள் தடையின்றி நடக்கவும், அரசின் திட்டங்கள் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களுக்கு விரைவாக சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
வேலூரில் இருந்து கடந்த ஆண்டு பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பணியாற்றி வந்த திவ்யதர்ஷினி, கிட்டத்தட்ட ஓராண்டாக மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சென்னை சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச்செயலாளராக திவ்யதர்ஷினி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இன்று (நவ. 15) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கூறியதாவது:
"புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப்பணிகள் தடையின்றி நடைபெறும். அரசின் திட்டங்கள் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கி முடியாமல் உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்கவும், புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனிம வளம் கொள்ளைப்போகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமியக்கழிவுகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து மனுவாக வழங்கலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.