Published : 15 Nov 2020 05:48 PM
Last Updated : 15 Nov 2020 05:48 PM

ஜவுளிக்கடை தீவிபத்து; பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்குக: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க முயன்றபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுச்சாமி இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:

"தீபாவளித் திருநாளை நேற்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைமிக்கக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

அதனை அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் உட்பகுதியில் தீயை அணைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் உட்பகுதி மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

அத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோர் அந்தக் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்செய்தி தீபாவளி தினத்தில் கடும் துயரத்தைத் தந்திருக்கிறது.

தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணம் அடைந்த வீரர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, படுகாயமடைந்த கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்பிட பிராத்திக்கிறோம்.

மேலும், தீ விபத்தில் தீயணைக்கும் பணியின் போது தங்களின் இன்னுயிரை இழந்திருக்கும் இரு வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாயும், படுகாயமடைந்த இரு வீரர்களுக்கு வெறும் 3 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது சற்றும் ஏற்புடையதல்ல.

திருவிழா காலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மக்களை காத்திட தீயணைப்பு பணியில் தங்களின் இன்னுயிரை பொருட்படுத்தாமல் செயல்பட்ட வீரர்களின் தியாகத்திற்கு இணையாக எவ்வளவு நிதியளித்தாலும் அந்நிதியால் ஈடு செய்ய முடியாது என்றாலும் கூட மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாயும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், படுகாயமடைந்த வீரர்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு சு.ஆ.பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x