

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை, எதிர்க்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.
அமித்ஷா வருகை குறித்து இன்று (நவ. 15) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "அமித்ஷா வருகையின்போது விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அந்த வரவேற்பு தனிமனித இடைவெளியை பின்பற்றி அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 200 பேருக்கு மிகாமல் கூட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, முக்கியக்குழுவின் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டங்களில் அமித்ஷா கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வார்.
அமித்ஷாவின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். தைரியம், புத்துணர்வை அளிப்பதாக இருக்கும். அமித்ஷா வருகையால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போகப்போக தெரியும்.
அமித்ஷா வரும் சமயத்தில் வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடப்பதால் அவர் கலந்துகொள்ள முடியாது. மற்ற அமைச்சர்கள் வருவார்கள். வரும் 22-ல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி பழநியில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், நவ.2-ல் மதுரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக செய்தித்தொடர்பாளர் மாளவிகா சுவாமிமலையிலும், தேசிய செய்தித்தொடர்பாளர் புரந்தேஸ்வரி தென்காசியிலும், கன்னியாகுமரியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வியும் கலந்துகொள்கின்றனர். இறுதி நிகழ்வுக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இறுதி செய்வோம்.
அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சியினருக்குப் பயத்தைக் கொடுப்பதாக அமையும்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.