பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செல்வாக்கை ஒழிக்க பாஜக திட்டம்: கி.வீரமணி விமர்சனம்

கி.வீரமணி: கோப்புப்படம்
கி.வீரமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செல்வாக்கை ஒழிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:

"பிஹாரில் ஆடும் நாற்காலி நாயகராக உள்ள நிதிஷ்குமார் ஆளும் நாற்காலிக்குரிய முதல்வராக அழுத்தமாக தனது நிலைப்பாட்டை வற்புறுத்த முடியாத, ஆர்எஸ்எஸ் வில்லுக்கு அம்பாகியே இனி ஆள முடியும்!

இல்லையேல், எந்த நேரத்திலும் பதவியிலிருந்து கவிழ்க்கப்படக் கூடிய கொடுவாள் அவர் தலைமீது தொங்கிக் கொண்டே உள்ளது.

அடுத்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தை பாஜக நேரடியாகவே தனது உயர்சாதி புஜ பல பராக்கிரமமான ஊடக பலம், அதிகார பலம், பண பலம், மத்திய ஆட்சி பலம் மூலம் ஒடுக்கிவிட ஆயத்தமாகி, அவரது மக்கள் செல்வாக்கைத் தடுக்கும் முயற்சியில் தாராளமாக ஈடுபடுவர்!

30 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பீகாரில் வெறும் உயர்சாதி ஆட்சியே நடந்த நவீன புஷ்யமித்ர சுங்கர் ஆட்சி புதுப்பிக்கப்படும் நிலைக்கான பலமான அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது!

இளைஞர்களே, ஒடுக்கப்பட்டோரே - ஏமாந்துவிடாதீர்கள்!

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டவர், நிதிஷ்குமார் பிற்படுத்தப்பட்டவர் என்ற காட்சி, தோற்றமாகத்தான் இருக்கும். உள்ளே ஸ்கேன் செய்தால், அது ஆதிக்க பீடத்தை லாவகமாக அசைக்க முடியாததாக ஆக்கிட சாம, தான, பேத, தண்டத்தைக் கையாளும், மனுதர்மத்தைக் காக்க வன்முறையும் தவறில்லை என்ற தத்துவ ஆயுதம் என்றும் அவர்களிடம் தயார் நிலையில் உள்ளது புலப்படும்.

இளைஞர்களே, ஒடுக்கப்பட்டோரே புரிந்துகொள்ளுங்கள், ஏமாந்துவிடாதீர்கள்!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in