அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை தமிழக அரசு தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன? - ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
2 min read

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:

"அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தத் துணைவேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதல்வரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.

சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அதிமுக அரசு? இந்த 9 மாதங்கள் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும், இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், 'தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது' என்று துணைவேந்தர் சூரப்பா மீதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும், முதல்வர் பழனிசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்?

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்காலப் பணி நீக்கம் செய்து, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதிமுக அரசு, 80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்து விட்டார்கள் என்று அரசாணையில் குற்றம்சாட்டியும், இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, திமுக ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு? குறிப்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் தனது விசாரணையைத் தொடங்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில், மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணைவேந்தரை உடனடியாக சஸ்பென்ட் செய்வதுதான் நேர்மையான நியாயமான விசாரணைக்கு வழிவிடும்.

ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமின்றி, ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in