Published : 27 Oct 2015 04:19 PM
Last Updated : 27 Oct 2015 04:19 PM

வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முயற்சிப்பதா?- அரசுக்கு திமுக கண்டனம்

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 10 ஆயிரம் லாரிகளில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர தமிழக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும், எங்கள் எதிர்ப்பை மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் லாரிகளில் காவிரி தண்ணீருக்குப் பதிலாக வேலூர் மக்களின் ரத்தத்தையும், வியர்வையையும்தான் கொண்டுவர முடியும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 10 ஆயிரம் லாரிகளில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது உண்மையாக இருந்தால் வேலூர் மாவட்ட மக்களுக்கு இதைவிடப் பெரிய துரோகம் இருக்க முடியாது.

பொதுவாகவே வேலூர் வறட்சியான மாவட்டம். ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைந்து வருகிறது. பாலாற்றில் தண்ணீர் வந்து பல பத்தாண்டுகள் ஆகிறது. நஞ்சையெல்லாம் புஞ்சையாகி, புஞ்சையெல்லாம் பாலையாகி வருகின்றன. குடிநீருக்காக மக்கள் படும் துயரம் கொஞ்சம் நஞ்சமல்ல.

வேலூர் மாவட்ட மக்களின் இந்த துயரத்தைப் போக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதைக் கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்துக்கு காவிரி குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமைபெறவில்லை. இந்நிலையில், இந்த திட்டத்தில் இருந்து தினமும் 10 ஆயிரம் லாரிகளில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர தமிழக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டுவர அதிமுக அரசால் முடியவில்லை. நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆனால், வறண்ட வேலூருக்கு கிடைக்கும் தண்ணீரை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் எங்கள் உயிர்த் திட்டம். இதை இழக்க வேலூர் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் எதிர்ப்பை மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் லாரிகளில் காவிரி தண்ணீருக்குப் பதிலாக வேலூர் மக்களின் ரத்தத்தையும், வியர்வையையும்தான் கொண்டுவர முடியும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x