தேசிய பத்திரிகை தினம்; நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அரணாக திகழும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள்: வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 15) வெளியிட்ட அறிக்கை:

"பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக தேசிய பத்திரிகை தினம் வருடம்தோறும் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாள், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிக்கும் நாளாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பத்திரிகைத் துறையை, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லலாம். இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை, நடுநிலையோடு பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறது. அதோடு, அரசியல், விளையாட்டு, தொழில், விவசாயம், கல்வி, அரசு திட்டங்கள் என்று பல்துறையின் செய்திகளை, கருத்துகளை, தகவல்களை நாட்டுக்கு அளிக்கும் மிகச் சிறந்த சாதனமாக திகழ்கிறது.

நேரம் காலம் பாராமல், இயற்கை சீற்றங்களுக்கும், இடர்பாடுகளுக்கு இடையில் தன்னலம் கருதாமல் செய்திகளை சேகரித்து மக்களிடையே கொண்டு செல்லும் பணியென்பது மகத்தான போற்றுதலுக்குரிய பணியாகும். பத்திரிகையாளர்கள் ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து பணியாற்றி, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதுணையாக அரணாக திகழும் பத்திரிகையாளர்களுக்கு தமாகா என்றும் துணை நிற்கும். இந்நன்னாளில் மென்மேலும் தங்கள் பணி சிறக்க அனைவருக்கும் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in