மதுரை தெற்கு மாசி வீதியில் தீ விபத்து: தீயணைப்புப் பணியில் 2 வீரர்கள் பலி; 2 பேர் காயம்

மதுரை தெற்கு மாசி வீதியில் தீ விபத்து: தீயணைப்புப் பணியில் 2 வீரர்கள் பலி; 2 பேர் காயம்
Updated on
1 min read

மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயன்ற வேளையில், கட்டிட உள்பகுதி இடிந்து விழுந்ததில் தீயணைப்புத் துறை வீரர்கள் 2 பேர் இடிபாடுகளில் சிக்கிப் பலியாகினர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை தெற்கு வட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு மேல் மாடியில் துணிக்கடை கிடங்கு உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது.

உடனடியாக மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்புத் துறையினர், பெரியார் பேருந்து நிலையத் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தக் கட்டிடம் நூற்றாண்டைக் கடந்த பழைய கட்டிடம் என்று கூறப்படுகிறது.

வீரர்கள் கட்டிடத்தின் உட்பகுதியில் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் கட்டிடத்தின் உட்பகுதி சாளரம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக அவர்களைச் சக வீரர்கள் மீட்டனர். இதில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீபாவளித் திருநாளில் ஏற்பட்ட திடீர் தீயும், அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவமும் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in