Published : 14 Nov 2020 12:02 PM
Last Updated : 14 Nov 2020 12:02 PM

சென்னையிலிருந்து 8,000 பேருந்துகளில் 4 லட்சம் பயணிகள் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நேற்று நள்ளிரவு வரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்குப் பயணித்துள்ளனர் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பேருந்து போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பயணிக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் சென்னையின் 5 மையங்களிலிருந்து இயக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

தீபாவளிக்கு முன் நவம்பர் 11, 12,13 ஆகிய தேதிகளிலும் தீபாவளிக்கு மறுநாள் 15,16,17,18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவ.11 முதல் 13 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். நேற்று வரையில் நவம்பர் 11,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து 9,610 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5,547 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்றைய நாள் வரையில் 93 ஆயிரத்து 625 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து 37 ஆயிரத்து 432 பயணிகளும் பிற ஊர்களில் இருந்து 56 ஆயிரத்து 193 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு 4 கோடியே 48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு வரை 8,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பயணிகள் அதிக அளவில் பெங்களூருக்குச் செல்ல இருப்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நவம்பர் 11 முதல் 16 வரை இ-பாஸ் இன்றி பேருந்துகள் இயக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பயணிகள் வருகை ஏற்ப சென்னையில் இருந்து 20 பேருந்துகளும் பெங்களூரில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஓசூரிலிருந்து பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் பல்வேறு இடங்களுக்கு 110 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர்ப் பகுதிகளில் குறிப்பாக பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்ந்த அலுவலர்களும், காவல் துறையினரும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் தடையின்றிச் செல்கின்ற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x