

தீபாவளியை முன்னிட்டு தனது இல்லம் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 7 மாதங்களுக்குப் பிறகு அவர் பொதுவெளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்று பரவுவதற்கு முன் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகும் நிகழ்வு பரபரப்பாகப் பேசப்பட்டது. பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார். சும்மா பத்து சீட்டு, இருபது சீட்டு என ஏதோ கட்சியைக் கடமைக்கு ஆரம்பித்துவிட்டு, ரசிகர்களைச் செலவழிக்க வைத்துச் செல்வது தனது எண்ணமில்லை என்று ரஜினி தெரிவித்தார்.
தனது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் தான் முதல்வர் அல்ல, ஒருவரைக் கைகாட்டுவேன். அவர்தான் முதல்வர் என்று தெரிவித்த ரஜினி, இளையவர்களுக்கே அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். மக்களிடம் ஒரு அலை உருவாக வேண்டும். மாற்றம் வருவதற்காக அந்த அலை பேரெழுச்சியாக உருவாக வேண்டும். அப்புறம் வருகிறேன் என்று தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
அதன் பின்னர் கரோனா தொற்று பேரலையாக மாறி உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டது. மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்தும் முடங்கின. ரஜினி அரசியலுக்கு வருவதும் தள்ளிப்போனது. அதன்பின்னர் தேர்தல் நெருக்கத்தில் கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் கூறிவந்த நிலையில், அவர் எழுதியது போல் ஒரு அறிக்கை வெளியானது.
அதில் தனது உடல் நிலை, மருத்துவர் ஆலோசனை காரணமாக கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை வெளியில் வருவதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு சில விஷயங்களும் அறிக்கையில் இருந்தன.
அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, அதில் உள்ள மருத்துவர் ஆலோசனை சம்பந்தப்பட்ட வரிகள் மட்டும் உண்மைதான் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கரோனா முடியும்வரை அவர் வெளியில் வர வாய்ப்பில்லை. இப்போது அரசியல் கட்சி இல்லை என்பதை ரசிகர்களுக்குச் சூசகமாக உணர்த்தியிருந்தார். இது தவிர 'அண்ணாத்த' படமும் ஷூட்டிங் செல்லாமல் பாதியில் நிற்கிறது.
கரோனா தொற்று காரணமாகத் தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ரஜினி பொதுவெளியிலும் வரவில்லை. இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு ரசிகர்கள் அவர் இல்லம் முன் திரண்டிருந்தனர். ரசிகர்களை ரஜினி சந்திப்பார், அப்போது பேட்டி அளிக்க வாய்ப்பு என்பதால் ஊடகத்தினரும் அவர் இல்லம் முன் திரண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்தபடியே ரசிகர்கள் முன் ரஜினி தோன்றினார். சிறிய நாற்காலி மீது ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்துக் கை அசைத்தார். முகக்கவசம் அணிந்த நிலையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்து ரசிகர்கள், 'தலைவா தீபாவளி வாழ்த்துகள்' எனக் குரல் எழுப்பினர்.
ரசிகர்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு, கை அசைத்து தனது வாழ்த்துகளை ரஜினி தெரிவித்தார். சில நிமிடங்கள் மட்டும் நின்ற அவர் எதுவும் பேசாமல் திரும்பி வீட்டுக்குள் சென்றார்.
7 மாதங்களுக்குப் பின், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிக்க ரஜினி முகக்கவசத்துடன் பொதுவெளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.