

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஏராளமானோர் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கரோனா அச்சம் காரணமாக, ’கடற்கரைக்கு செல்லக் கூடாது’ என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், தடையை மீறி உள்ளூர் மக்கள் கடற்கரைக்கு சென்றுதான் வருகிறார்கள். இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் மறுநாள் (நாளை) ஞாயிற்றுகிழமை வருவதால் விடுமுறையையொட்டி ஏராளமானோர் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரக்கூடிய நிலை உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருவோரை திருப்பிவிடும் பணியில் போலீஸார் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் கூறியதாவது: கரோனா அச்சத்தால் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவே, கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தொற்று அச்சம் உள்ளதால் கடற்கரைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.