Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM

தஞ்சாவூர், கரூர், ஈரோடு, தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் ரூ.1,347 கோடியில் விரைவில் 7 கூட்டு குடிநீர் திட்டங்கள்: உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தகவல்

தமிழகத்தில் தஞ்சாவூர், கரூர், ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.1,347 கோடியே 5 லட்சம் செலவில் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையி்ல் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியதாவது:

கரூர், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்ட ஊரகப் பகுதிகளில் 8 லட்சத்து 24 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.1,347 கோடியே 5 லட்சம் மதிப்பில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அரசின் நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் உள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு, வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தொழிற்சாலை தேவை பங்கீட்டிலிருந்து குடிநீர் வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியங்கள், திருவிடைமருதூர் பேரூராட்சி மற்றும் வேப்பத்தூருக்கு கொள்ளிடம் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

கூட்டுக் குடிநீர் மறுகட்டமைப்பு

தென்காசி களியங்குளம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.50 கோடியே 50 லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் 756 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போதுள்ள 4 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுகட்டமைப்பு செய்தும் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர்திட்டம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் 8 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 197 ஊரகக் குடியிருப்புகளுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோபி மற்றும் நம்பியூர் ஒன்றியங்களில் உள்ள 6 ஊராட்சிகளில் 133 குடியிருப்புகளில், 96 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில் அமைந்துள்ள 442 ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுகட்டமைப்பு செய்தும் காவிரியை நீராதாரமாகக் கொண்டுபுதிய கூட்டுக் குடிநீர் திட்டம்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொடுமுடி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில், 144 ஊரகக் குடியிருப்புகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டங்களை ஜல்ஜீவன்மிஷன் திட்டத்தின்கீழ் செயல்படுத்த மாநில அளவிலான திட்ட ஒப்புதல்குழுவின் பரிந்துரை பெறப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் அரசு துறைச் செயலர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கிருஷ்ணன், ஹர்மந்தர்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x