

பெற்றோர்கள் சரியான உணவுப் பழக் கத்தை பின்பற்றினால்தான், குழந்தை களும் அதைப் பழகுவர் என மனநல ஆலோசகர் மற்றும் உள சிகிச்சை யாளர் ப. ராஜசௌந்தர பாண்டியன் தெரிவித்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான பணியாகி விட்டது. பெற்றோர் பலர், தாங்கள் பட்ட சிரமத்தை குழந்தைகளும் படக் கூடாது என்பதற்காக, அவர்களை அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள்.
ஆனால், பல சமயங்களில் அவர் களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய பல முக்கியமான விஷயங்களை சொல்லாமல் விட்டு விடுகிறோம். ஆதலால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானவுடன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பெற்றோர் குழந்தைகளுக்கு மிக முக்கியமாகக் கற்றுத்தர வேண்டிய விஷயம் சுய விழிப்புணர்வு. சிறு வயதிலேயே அதைக் கற்கும்போது அவர்கள் உச்சம் தொடுவர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் மனநல ஆலோசகர் மற்றும் உள சிகிச்சையாளர் ப.ராஜசௌந்தர பாண்டியன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது: குழந்தைகளுக்கு அவர்களின் பலம், பலவீனத்தை அறிய கற்பிக்க வேண்டும். ஒரு பணியைக் குறித்த நேரத்தில் முடிக்கச் செய்ய வேண்டியதை சொல்லித் தர வேண்டும். பள்ளி வேளைகளில் தவறுகளைக் கவனித்து திருத்தம் அல்லது மாற்றங்களைச் செய்து வர வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பேச பழக்க வேண்டும். இன்று ஆங்காங்கே குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் விரும்பாத விதத்தில் யாராவது அவர்களைத் தொடுகிறார்கள் என்றால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும், அந்த நபரிடம் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பக்கத்தில் யாரும் இல்லையெனில் கூச்சலிடக் கற்றுத் தர வேண்டும். அடுத்தபடியாக பெற்றோர் சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால் குழந்தைகளும் ஆரோக் கியமான உணவுப் பழக்கத்தைப் பின் பற்றுவர் என்றார்.